
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களிடமிருந்து 5 நிமிடங்கள் கைத்தட்டு பாராட்டை பெற்றிருந்தது.
இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. பின்பு டப்பிங் பணிகள் தொடங்கியது. அடுத்ததாக முதல் பாடலான ‘தெனந்தெனமும் ஒன் நெனப்பு’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், 60 மற்றும் 70-களில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் எழுச்சி, அவர் முன்னெடுத்த அரசியல் போராட்டங்கள் மற்றும் அவருடைய காதல் வாழ்க்கை என அனைத்தும் கலந்து அழுத்தமான காட்சிகளுடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது.
ட்ரைலரில் வரும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி பேசும், “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேக்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்ப, நீங்க கட்டமைச்சக்கிற ஜாதி, மதம், பிரிவினை வாதம்... இத வச்சு உங்க அமைப்பு அரசியல் பண்ண முடியாம போச்சு, அப்ப ஆரம்பிச்சது இந்த பயம். அந்த பயத்தால தான் எங்கள பிரிவினைவாதிகள்னு பிரச்சாரம் பன்றீங்க’, ‘வன்முறை எங்க மொழி இல்ல, ஆனா அந்த மொழியும் எங்களுக்கு பேசத் தெரியும்’, ‘ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிற்கிரவங்க எல்லாருமே நம்ம தோழர்கள்தான்’, ‘தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது’ போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.