‘விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது வெற்றிமாறன் பேசுகையில், “ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. அந்த உழைப்பு ஒரு சிலருடைய பார்வை மேல், மற்ற எல்லாரும் கண்மூடித்தனமாக வைக்கும் நம்பிக்கை மூலம் முழுமையாகும். இந்த கதையை 2020ல் ஆரம்பித்தோம். 4 வருஷம் ஆகிவிட்டது. நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் போது கல்யாணம் பண்ணவங்க, குழந்தை பெத்து அதை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாங்க. அவ்ளோ நாள் நடந்திருக்கு. இவ்வளவு காலம், ஒரு கதை, அதில் இருக்கும் தத்துவம், அதை புரிந்து கொள்ள முயற்சிக்கின்ற ஒரு டீம், அந்த டீமில் 450 பேர் இருந்தனர். அனைவருமே இந்த பயணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுதான் பயணித்தோம். இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
சினிமா மாதிரியான வேலை என்பது கீழிருந்து மேலே வருவது. செட் அசிஸ்டண்ட்டில் இருந்து மேக்கப் போடுகிற ஆள் வரை எல்லாருமே ஈடுபாடுடன் வேலை பார்த்தால் தான் இயக்குநருடைய இலக்கை முடிக்க முடியும். அதனால் வேலை பார்த்த எல்லாருக்கும் நன்றி. படத்தில் என்னுடைய அசிஸ்டெண்ட் அனைவரும் கோ-கிரியேட்டர்ஸாக உழைத்திருக்கிறார்கள். இதுபோன்ற டீம் கிடைத்தது என்னுடைய பாக்கியம். அவர்கள் இல்லை என்றால் இயக்குநர் என்ற பெயர் எனக்கு கிடைத்திருக்காது. இதில் ராஜா சார் உள்ளே வந்தது என்னுடைய அதிர்ஷ்டம். அவர் ரொம்பவே பன்ச்சுவல். நான் பத்து நிமிடம் லேட்டா சென்றால் கூட அதற்குள் நான்கு ட்யூன் போட்டு வைத்திருப்பார். அவர் எனக்கு பர்சனலாகவும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் எனக்கு பெருமையான விஷயம். படத்தில் இயக்குநரின் வேலை என்ன அதற்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பு என்ன தர முடியும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அவரின் ஜீனியஸ் மைண்டை அருகில் இருந்து பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப்படி வேலை பார்ப்பார் என்பதை ரெக்காட் பண்ணி வச்சிருக்கேன்.
படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவருடன் வேலை பார்க்க கிடைத்த இந்த வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை மெருகேற்றிக் கொள்ள உதவியது. எட்டு நாள்தான் கால்ஷீட் என சேதுவை இந்தப் படத்திற்கு கூப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் சேது குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி. சூரியும் நிறைய நாட்கள் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம். ஷூட்டிங் இருக்கிறதோ இல்லையோ, இந்த படத்து கூடவே பயணித்தவர்கள் நிறைய பேர் இருக்குறாங்க. அதில் இரண்டு, மூணு பேர் தோழர்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க, அவர்கள் அப்படி கூப்பிட்டு பழகியவர்கள். ஆனால் இன்றைக்கு எல்லோரும் தோழர் என கூப்பிடுகிறோம். அந்தளவிற்கு ஒரு சகோதரத்துவம் உருவாகிவிட்டது.
இந்தப் படத்துடைய சம்பந்தவட்டர்கள் எல்லோருக்கும் விடுதலைதான் வாத்தியார். விடுதலை தான் நிறைய கத்துக்கொடுத்து வருகிறது. நான் இந்தப் படத்துக்காக நிறைய பேர் கிட்ட பேசி, தெரிஞ்சு, கத்துக்கிட்டு, அதை டீமுடன் பகிரும் போது அவர்கள் எந்தளவிற்கு உள்வாங்குறாங்க என்பதை பொறுத்து தான் என்னுடைய கற்றல் குறித்து தெரிஞ்சுக்க முடிந்தது. இந்தப்படம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசையை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். ராஜா சார் என்ன பண்ண போகிறார் என்பதை பார்க்க் ஆர்வமாக இருக்கிறேன். படப்பிடிப்பு 257 நாட்கள் என கேட்டவுடன் எந்தளவிற்கு இதில் சவால் இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அப்பவும் கடைசி நாளில் வேறு வழியில்லாமல் ஷூட்டிங்கை நிறுத்திக்கிறேன் என்றறேன். முடித்துக்கொள்கிறேன் என சொல்லவில்லை. படத்தில் மஞ்சு வாரியரையும் 3 நாட்கள் கால்ஷீட் என்றுதான் கூப்பிட்டேன். ஆனால், இப்போது அவருக்கு படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அவருடைய கதாபாத்திரம் முக்கியமானது” என்றார்.