தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகியுள்ள 'சார்' படம் தமிழில் 'வாத்தி' என்ற தலைப்பில் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தை நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்க வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தமிழில் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இப்படம் உருவாக இன்ஸ்பிரேஷனாக இருந்த ஆசிரியர் கே.ரங்கய்யாவை இயக்குநர் வெங்கி அட்லூரி சந்தித்துள்ளார். அவரை அங்கீகரிக்கும் விதமாக தொலைதூர பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் முழுவதும் நூலகம் அமைப்பதற்காக ரூ.3 லட்சம் பரிசு தொகையை வழங்கியுள்ளார்கள்.
மகாராஷ்டிராவில் உள்ள சவர்கெட் பகுதியில், மாணவர்களின் பள்ளிப் படிப்பை தொடர கே.ரங்கய்யாவின் முயற்சி முக்கியமாக பார்க்கப்படுகிறது. அவர் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவரது கிராமத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர் மாற்றப்பட்டபோது, மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை அவர் ஏற்றார். மேலும் அந்த பகுதியில் உள்ள தொடர் பிரச்சனைகளுக்கு எதிராக பிரச்சாரங்களை நடத்தினார். கே.ரங்கய்யாவின் முயற்சிக்காக குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.