சென்னை நங்கநல்லூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வரும் திரையரங்குகள் வெற்றிவேல் மற்றும் வேலன். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி வரி உயர்த்தியிருந்த நிலையில் இரு திரையரங்கு சார்பில் வரி அதிகமாக இருப்பதாக கூறி கட்ட இயலாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் வரி கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இரு திரையரங்குகளும் 6 ஆண்டுகளாக வரி கட்டாமல் ரூ.60 லட்சம் நிலுவையில் வைத்துள்ளனர். வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை திரையரங்குகளுக்கு வரி கட்ட சொல்லி நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் திரையரங்கு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தற்போது சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் இன்று இரண்டு திரையரங்குகளுக்கும் சென்று அங்கிருந்த ஆட்களை வெளியேற்றி மின்சார இணைப்புகளைத் துண்டித்தனர். மேலும் இரண்டு திரையரங்கின் முகப்புகளுக்கும் சீல் வைத்துள்ளனர். அப்போது போலீஸ் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.