தொடர் கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மேலும் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அமராவதி, விஜயவாடா, குண்டூர் உள்ளிட பல பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கி இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அரசு முகாம் அமைத்து உதவி செய்து வருவதோடு ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதோடு நிவாரணம் வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அரசு மட்டுமின்றி தனியார் அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்து உதவி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளது. இது தொடர்பான அந்நிறுவன எக்ஸ் பக்கத்தில், “ நாங்கள் ஆந்திரப் பிரதேச முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்க உறுதியளிக்கிறோம். இந்த மாநிலம் எங்களுக்கு நிறைய வழங்கியுள்ளது. இந்த சவாலான நேரத்தில் திரும்பக் கொடுப்பது எங்கள் கடமை என்று நாங்கள் உணர்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் தயாரித்த ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.