பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. ரஜினியின் நெற்றிக்கண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பில் களமிறங்கியது.
இதனை தொடர்ந்து பல கலைஞர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் இந்நிறுவனம், சின்னத்திரையிலும் சீரியல்களை தயாரித்து வந்தது.
1981ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கிய இந்நிறுவனம் இறுதியாக பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'திருவண்ணாமலை' படத்தை 2008ஆம் ஆண்டு தயாரித்தது.
பல வருடங்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த கவிதாலயா நிறுவனம், தற்போது டிஜிட்டல் யுகத்தில் மீண்டும் தயாரிக்க களமிறங்கியுள்ளது. 'ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்' என்ற தொடரை அமேசான் நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு தயாரித்தது.
தற்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றையும் அமேசான் நிறுவனத்துக்காகத் தயாரித்துள்ளது. 'டைம் என்ன பாஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். பரத், ப்ரியா பவானி சங்கர், அலெக்ஸாண்டார் பாபு, சஞ்சனா சாரதி, ரோபோ ஷங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் 'டைம் என்ன பாஸ்' வெப் சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.