தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களாக கருதப்படும், வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் தங்களது படங்களில் அதிகாரத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை காட்சிப்படுத்தி பெரும் கவனத்தை பெற்று வருகின்றனர். இவர்களது படங்கள் சினிமாவை தாண்டி அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறி வருகிறது. மூவரின் படங்கள் பலராலும் கொண்டாடப்பட்டாலும். சிலரால் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
இந்த விமர்சனங்கள் குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார். புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், வெற்றி மாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் சாதிய படங்கள் எடுப்பதாக விமர்சனம் இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் சாதி பெருமை பேசக்கூடிய படங்களை எடுத்தது இல்லை. சாதிய கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கக்கூடிய, விவாதத்திற்குள்ளாகக்கூடிய கருப்பொருளைத்தான் மையப்படுத்தி படம் எடுத்திருக்கிறார்கள். அதுதான் இப்போது சாதியவாதிகளுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.
அவர்கள் மூன்று பேரும் சாதியை உயர்த்தி பிடிக்கிறவர்கள் அல்ல. ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என்கிற வேட்கை அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் படங்களின் வாயிலாக தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். சாதிய பிரச்சனைகள் 99 சதவீதம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதில் 1 சதவீதம் தான் அதற்கு எதிராக பேச நாங்கள் பேசத்தொடங்கியுள்ளோம். இந்திய அளவில் இந்த விவாதங்கள் விரிவாக்க வேண்டும், அது ஜனநாயகப் பூர்வமாக நடக்க வேண்டும்” என்றார்.
வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை 2’, படத்தை இயக்கி வருகிறார். மேலும் ‘வாடி வாசல்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘விடுதலை 2’ படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘வாழை’ படத்தின் வெற்றிக்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். மேலும் தனுஷுடன் மீண்டும் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்ததாக வேட்டுவம் படத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.