Skip to main content

“கசப்பான உண்மைகள்” - லப்பர் பந்து குறித்து திருமாவளவன்

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
thirumavalavan about lubber pandhu movie

உதயநிதி நடிப்பில் 2022ஆம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் காளி வெங்கட், பால சரவணன், டி.எஸ்.கே. என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் இப்படத்தை பார்த்து பாராட்டினர். மேலும் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், கார்த்தி, ராஜு முருகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர். 

இந்த நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. இந்தப் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “அனைத்து தரப்பு மக்களும் பாராட்டக் கூடிய அளவிற்கு இந்தக் கதையின் கரு அமைந்திருக்கிறது. தமிழரசன் பச்சமுத்து காலத்துக்கு தேவையான ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் திறமையை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். அதில் வேறு எந்த அடையாள அரசியல் கூடாது என்பதை அவர் சொல்கிறார். கிராமப்புற கிரிக்கெட் குழுவில் எவ்வாறு சாதி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்தப் படம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இது வெளியில் தெரியாத கசப்பான உண்மைகள். இது கிராமப்புறங்களில் மட்டும் இல்லை. அகில இந்திய அளவிலும் கூட இருக்கிறது. அங்கு வீரர்களை தேர்வு செய்வதில் சாதி அரசியல் இருக்கிறது. அதோடு மொழி, இன அடையாள அரசியலும் இருக்கிறது. 

சாதி அரசியல் பேசும் அதே இடத்தில் ஆணாதிக்க அரசியலையும் பேசியிருக்கிறார். இந்தப் படம் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படம் அல்ல. இந்த தலைமுறைக்கு சொல்லப்பட வேண்டிய அரசியல். அதனால்தான் இந்தப் படத்திற்கு ஜனநாயக சக்திகளுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. தமிழரசன் பச்சமுத்து இது போன்ற சிறப்பான படங்களை சமூகத்துக்கு படைத்து தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பழைய பாடல்களை பின்னணியில் போட்டு எந்த சோர்வும் இல்லாமல் படத்தை நகர்த்துகிறார். அது நல்ல யுக்தி” என்றார். 

பின்பு அவரிடம் கதாநாயகி பேசும் வசனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “50ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்ல தயங்குவார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. படத்தில் கதாநாயகி, ‘நீங்கள் சொல்கிற வரைக்கும் திருமணம் செய்ய மாட்டேன். அவனைத் தவிர வேறு எவனையும் திருமணம் செய்ய மாட்டேன்’ என்று பேசும் வசனம் பெண்களுக்கு எந்தளவு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. அந்த துணிச்சல் தார்மீகமானது. எத்தனையே பல ஆணவக் கொலைகளில் பெண்கள் வாயடைத்து போய் நிற்கிறார்கள். தனது பெற்றோரையும் சமூகத்தையும் எதிர்த்து அவர்கள் பேசு முடிவதில்லை. அந்த நிலை தற்போது மாறி வருகிறது. அந்த உளவியலை தமிழரசன் பச்சமுத்து கதாநாயகி பாத்திரத்தின் மூலம் மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அதற்கு அந்த வசனம் வெளிப்படையாக இருக்கிறது” என்றார்.            

பின்பு அவரிடம் படத்தில் வரும் பட்டியலின மக்கள் தொடர்பான வசனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், “வெளிப்படையாக இந்த உரையாடலை தொடங்கப் பட வேண்டிய தேவை இருக்கிறது. அதைத்தான் தமிழரசன் பச்சமுத்து முயற்சிக்கிறார் என பார்க்கிறேன். பட்டியலின மக்கள் என்னுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள், அவர்களைத் தான் நான் உதவியாளர்களாக வைத்திருக்கிறேன், சமையல் காரர்களாக வைத்திருக்கிறேன் என சொல்வது அவர்களுடைய சாதிய உணர்வுகளில் இருந்து வெளிப்படுத்தக் கூடிய ஒன்றா அல்லது சமத்துவமாகத் தான் இருக்கிறேன் என சொல்ல முயற்சிக்கிற ஒன்றா. இது இரண்டுக்கும் உண்டான குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய செய்தியாக இருக்கிறது. அதை பொதுவெளியில் ஒரு உரையாடலாக மாற்றுகிறார் இயக்குநர். அதுதான் முக்கியமானது. இந்த மாதிரியான போக்கு என்பது அவர்கள் தங்களை பற்றிய உயர்வான மனநிலையில் இருந்து சொல்கிற போக்காக இருக்கிறது. அந்த உளவியல் நொறுக்கப்பட வேண்டும். அது தவறு. பிறப்பின் அடிப்படையில் எல்லோரையும் அப்படி பார்க்ககூடாது. நாம் நண்பர்களாக சக மனிதர்களாக இருக்க வேண்டும் என்பது தான் இயக்குநர் சொல்ல வருகிற செய்தி” என்றார்.

சார்ந்த செய்திகள்