‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நமீதா, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். சின்னத்திரையுலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். இடையே அரசியலில் ஆர்வம் காட்டி பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். இன்னொரு படத்தில் நான் ஆரம்பகாலக்கட்டத்தில் நடித்தது போல் கவர்ச்சியாக நடிக்க அழைத்தார்கள். ஆனால் இரண்டு படங்களுமே நான் நான்கு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் போது வந்தது. அதனால் எதுவும் பண்ண முடியவில்லை.
கடந்த 3 வருடம் குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் என்னை ஒப்படைத்து விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பிடித்ததை செய்ய ஆரம்பிக்கப்போகிறேன். சின்னத்திரை, வெப் சீரிஸ், ரியாலிட்டி ஷோ அனைத்திலும் என்னை பார்க்கலாம். புது கதைகள் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறேன். ஆனால் நான் முன்பு நடித்தது போல், முக்கியத்துவம் இல்லாமல் வெறும் கவர்ச்சி மட்டும் காண்பிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். அதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். கடந்த 7 வருடத்தில் இந்தியா முழுவதும் பெண்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. அனுஷ்கா ஷெட்டி போன்ற நடிகைகள் சிறந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அது போல் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் இனி நடிக்க முடிவெடுத்துள்ளேன்” என்றார்.