தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக வெளியூர்களில் இருக்கும் மக்கள், சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் 3 நாள்களுக்கு முன்பாகவே பயணம் செய்வதற்கு தீபாவளிக்கு முதல் நாள் வரை 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து, 11,176 பேருந்துகள் இயக்கப்படும். 28ஆம் தேதி அன்று வழக்கமாக இயங்குகின்ற 2,092 பேருந்துகளோடு 700 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
அதற்கு அடுத்த நாளான 29ஆம் தேதி வழக்கமாக இயங்குகின்ற 2,092 பேருந்துகளோடு 2,135 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். 30ஆம் தேதி 2,092 வழக்கமான பேருந்துகளோடு, 2,075 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். எனவே, வழக்கமாக இயங்குகின்ற 6,276 பேருந்துகளோடு 4,900 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மொத்தம் 11,176 பேருந்துகள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு வழிவகை செய்யும் வகையில் இயக்கப்படும். இந்த பேருந்துகளை இயக்குகின்ற பொழுது, ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்தில் பொன்னேரி, ஊட்டுக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் வழக்கமாக, திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்ற பேருந்துகளும் இயக்கப்படும். தங்கள் சொந்த ஊருக்குச் சென்றவர்கள், திரும்பி வருவதற்கு வகை செய்கின்ற வகையிலும், அந்தந்த பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த பிறகும் பிற ஊர்களில் 3,165 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. அதே போல், பயணிகள் வசதிக்காக 24*7 கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் புகார் அளிக்க 94450 14436 என்ற எண்ணை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகாரை தெரிவிப்பதற்கு 1800 425 6151 மற்றும் 044 24749002, 044 26280445, 044 2681611 என்ற எண்கள் வழங்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் 24 மணி நேரமும் செயல்படுகின்ற கட்டுப்பாட்டு அறையிலும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். பேருந்துகள் குறித்து தகவலை பெறுவதற்கு அங்கு தகவல் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை கே.கே.நகரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கும் திட்டம் இல்லை. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.