சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதியன்று 38 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது. ட்ரைலரில் ‘நம்ம வாழும் இந்த தீவுக்குள்ள எத்தனையோ மர்மங்கள் கொட்டிக்கிடக்குது’ என்ற பின்னணி குரலில் ஆரம்பித்து அதன் பிறகு சூர்யாவை காண்பித்திருந்தனர். அதோடு அந்த தீவையும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ட்ரைலரில் காட்டியுள்ள அந்த தீவு பற்றியும் அது எங்கு படமாக்கப்பட்டது என்ற அனுபவத்தை பற்றியும் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா, நக்கீரன் ஸ்டூடியோவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இந்த படத்தின் கதை எழுதும்போது அடர்ந்த காடு, ரவிபுகா காடு, அடர்ந்த காடு என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன் அதற்காக சிறந்த லொக்கேஷன் தேவைப்பட்டது. அதனால் நிறைய காடுகளைத் தேடி அழைந்தோம். தயாரிப்பு வடிவமைப்பாளர் மிலன் என்னிடம் வந்து, கொடைக்கானலில் தேடிப் பார்க்கலாம் என்றார். அதன் பிறகு அங்கு சென்ற போது தாண்டிக்குடி என்ற இடத்தில், நான் சொன்னது போல அழகான லொக்கேஷன் சிக்கியது. அடுத்ததாக படத்தில் வரும் பெருமாச்சி என்ற தீவுக்காக கொடைகானலிலுள்ள ஒரு மலை முகட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மிகவும் சிரமப்பட்டு சென்றோம். அங்கு பனி மூட்டத்தில் கவிதை மாதிரி அந்த இடம் இருந்தது.
அதன் பிறகு மிலன் சார் அங்கு படப்பிடிப்பிற்கான செட் பணிகளை துவங்கலாம் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, அந்த இடத்தில் கதைக்கு தேவையான குடில்களை அமைப்பது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். மிலன் சிரித்துக்கொண்டேன் நான் பண்ணி தருகிறேன் என்று சொன்னார். அதன் பின்பு செட் போடுவதற்கு வண்டிகள் அங்கு செல்ல தற்காலிக பாதையை தாயாரிப்பாளர் ஏற்படுத்திக் கொடுத்தார். 100 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அந்த இடத்திற்கு அதிகாலை 2.45 மணிக்கு புறப்படுவோம். அப்போதுதான் நாங்கள் நினைத்த நேரத்திற்கு செல்ல முடியும்.
அங்கு சென்றதும் 500க்கும் மேற்பட்டோருக்கு மேக் அப் செய்து தயாராக இருப்போம். காலை 6.30 மணிக்கு ஒளிப்பதிவாளர் வெற்றி வருவார். அந்த சமயம் இயற்கையாகவே மூடு பனிக்குள் சூரிய ஒளி பட்டும், படாமலும் ரம்மியமாக இருக்கும். வழக்கமாக அந்த நேரத்தில் காதல் காட்சிதான் எடுப்பார்கள். ஏனென்றால், காதல் மர்மமான ஒன்று. அங்குள்ள மூடுபனியும் அதற்கேற்ற மர்மத்தை கொடுக்கும். அதே போல் இந்த படத்தின் அடிநாதத்தில் ஒரு மர்மம் இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதற்காக அந்த மூடுபனி சூழல் தேவைப்பட்டது. அந்த சூழலில்தான் ஆக்ஷன் காட்சிகள் எடுத்துள்ளோம். அதைப் பார்க்கும்போது புது அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும்” என்றார்.