
தமிழகத்தில் பல்வேறு மதப் பின்னணியில் உள்ளவர்கள் வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் சகோதர மனப்பான்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். ரம்ஜானுக்கு உரிமையாக பிரியாணி கேட்பதும், கிறிஸ்துமஸ்க்கு கேக் கேட்பதும் இந்துக்களின் திருவிழாக்களில் மற்ற மதத்தினர் சீர்வரிசை கொண்டு வருவதும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
முஸ்லீம்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு இருப்பார்கள். சூரிய உதயத்திற்கு முன்பு உணவு எடுத்துக்கொண்டு பகல் முழுவதும் விரதம் இருந்து சூரியன் மறைந்த பிறகு உணவு எடுத்துக் கொள்வார்கள். இதனை நோன்பு வைப்பது என்று சொல்வதுண்டு. பள்ளி வாசல் சென்று மாலை நேரத்தில் நோன்பு திறக்க முடியாதவர்களுக்கு மற்ற மதத்தினரும் உதவி செய்ததாக செய்திகள் உண்டு.
இதனை மையமிட்டு ரமலான் முபாரக் பாடல் ஒன்று நெகிழ்ச்சி என்ற ஆல்பமாக யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஓ இறையோனே கொடுத்தாய் ரமலானை’ என்று தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து இயக்கியுள்ளார். இந்த பாடல் வரிகளை ஹாஜாகனி மற்றும் தெ.சு.கவுதமன் இணைந்து எழுதியுள்ளனர். இன்ஸ்டாகிராம் பிரபலமான மணி, தனா ஆகியோர் நடித்துள்ளனர்.