கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசியபோது....
“சினிமா என்னாகுமோ, ஏதாகுமோ, திரையரங்குகள் திறக்கப்படுமா, மக்கள் கூட்டம் வருமா, என்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து. ஆனால், மாஸ்டர் என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த படம் கொடுத்த தைரியம் தான் இன்று 'கபடதாரி' ரிலீஸ் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கரோனா காலக்கட்டத்தில் தனது சம்பளம் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, அதை செயல்படுத்திய முதல் ஹீரோ விஜய் ஆண்டனி சார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிபியும் இந்த படத்திற்காக அதை செய்திருக்கிறார். தனஞ்செயன் சார் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். அதனால்தான் இத்தனை வருடங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு சினிமா மீது மிகப்பெரிய பேஷன். பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால் அவற்றில் செல்லாமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த நேரத்தில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தரும். சிபி இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார். இயக்குநர் பிரதீப் இந்த படம் மூலம் பெரிய வெற்றி பெற வேண்டும். சிபி நல்ல நடிகர். மிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சினிமா கஷ்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு
வருகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.