மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாகச் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்திருந்தர். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியைக் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அறிந்து கொள்ளவும். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மற்றபடி இந்த விவகாரம் சட்டப்படி கையாளப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த பாலியல் புகார் எழுந்தது தொடர்பாக உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்த, “என் மீது புகார் கூறிய அந்த பெண் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் அவரைப் பார்த்தது கூட கிடையாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த செய்தி என் குடும்பத்தைப் பாதிக்கிறது. நான் தவறு செய்யவில்லை என்பதில் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை உடனடியாக நடத்துகிறேன். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சட்டப்படி கையாண்டு, புகாருக்கு எதிராகப் போராடுவேன். உண்மையை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்” என்றார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பமாக ஹோட்டல் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை. அவர் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கொச்சியில் உள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கியதற்கான ஹோட்டல் ரசீதை வெளியாகியுள்ளது. நிவின் பாலி டிசம்பர் 14ஆம் தேதி மதியம் முதல் அடுத்த நாள் (டிசம்பர் 15ஆம் தேதி) மாலை வரை அங்கேயே தங்கியிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.