தமிழகத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடியின் ஆரம்ப கட்டமாகத் திகழ்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான 'கலக்கப்போவது யாரு', 'அசத்தப்போவது யாரு' ஆகியவற்றில் மிமிக்ரி இல்லாமல், மதுரை மண்ணின் மொழியில் பேசி, கதைகள் சொல்லி மக்களை ரசித்துச் சிரிக்க வைத்தவர், வைத்துக்கொண்டிருப்பவர் மதுரை முத்து. யூ-ட்யூப், டிக் டாக் என அவரது நகைச்சுவை வீடியோக்கள் பரவி மக்களை மகிழ்ச்சிப்படுத்திவருகின்றன. கரோனா காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். உரையாடலின் ஒரு பகுதியில் சிவகார்த்திகேயனுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...
"2012ஆம் வருஷம் சிகாகோவுக்குப் போயிருந்தோம். அமெரிக்காவின் FeTNA அமைப்பு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அந்த நிகழ்ச்சிக்காகப் போகும்போது பத்து மணிநேரம் ஒன்னாதான் பயணம் பண்ணோம். அப்போ ரொம்ப அன்பா பழகுனார். 'அண்ணே, உங்க கலக்கப்போவது யாரு சீசன் நடக்கும்போது, நான், சதீஸ் எல்லாம் ரூம்ல உக்காந்து பாப்போம்ணே. 'இவர்தான் ஜெயிக்கப்போறார் பாரு'ன்னு உங்களை பற்றி பேசிக்குவோம்'னு ரொம்ப நல்லா சொன்னார்.
ஒரு மனுஷன் எப்படி ஜெயிக்கிறது என்பதை சிவகார்த்திகேயன்கிட்ட பார்த்தேன். ரொம்ப அருமையான மனிதர். அவருக்கு ஒரு சீசன் முன்னாடி கலந்துகொண்ட சீனியர் என்ற ஒரே காரணத்துக்காக அவ்வளவு மரியாதை. "அண்ணே... நீங்க இருங்கண்ணே நான் வாங்குறேன்"னு போய் டாலர் மாத்தி எனக்காக காபி வாங்குனாரு. என் டிராலி பேக்கை எடுத்துக்கொடுத்தார். இப்படி, ரொம்ப எளிமையா பழகுனார். இத்தனைக்கும் அவர் படம் அப்போ ரிலீசாகி ஓடிக்கிட்ருக்கு. நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல. ஆனால், அவருக்கு கொஞ்சம் முன்னாடி என்னை டிவியில் பார்த்து ரசித்தோம் என்ற அந்த ரசனைக்காக என்னிடம் பணிவா, அன்பா நடந்துக்கிட்டார் பாத்திங்களா? அதுதான் அவரை இவ்வளவு தூரம் உயர்த்தி கொண்டு வந்துருக்கு. சூப்பர் ஸ்டார் எவ்வளவு உயரத்தில் இருக்கார்? அவர் உயரத்துக்கும் அவரோட சிம்ப்ளிசிட்டிதான் காரணம். இந்த மாதிரி எல்லா நடிகர்களும் எளிமையா இருந்தா அதுவே அவங்களுக்கு நெறய ரசிகர்களைக் கொடுக்கும்.
நேற்று கூட ரோபோ சங்கர் போன் பண்ணிருந்தார். ஒரு மணிநேரம் ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக்கொண்டு குடும்பத்துடன் பேசிக்கிட்ருந்தோம். ஒரு பத்து வருசமா மேடை மேடைன்னு ஓடிக்கொண்டிருந்த அனுபவங்களையெல்லாம் பேசித்தீர்த்தோம். நான் யார்ட்டயும் மனம் கோணும்படி பேச மாட்டேன். எல்லோரும் நெருக்கமா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் உண்டு."