நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக நடக்கும் தொந்தரவுகளை இந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள் சமீபகாலமாக தைரியமாக வெளி உலகிற்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளனர். இதில் சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் தற்போது பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கானும் இது குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், "நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகளின் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் வாழ்க்கை மேம்படுகிறது. இந்தி பட உலகில் பெண்களை படுக்கையில் பயன்படுத்தினாலும் அவர்களை அப்படியே விட்டு விடாமல் வேலை கொடுக்கிறார்கள். தவறானவர்கள் பிடியில் சிக்க கூடாது என்று ஒரு பெண் விரும்பினால் அவளுக்கு அத்தகைய நிலைகள் ஏற்படாது. திறமை இருக்கும் பெண் ஏன் அவளை விற்க வேண்டும்..." என்றார்.
இப்படி அவர் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு பட உலகில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியும் சரோஜ்கானை கண்டித்து இருக்கிறார். அப்படி அவர் கண்டித்து பேசும்போது, "சரோஜ்கான் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவர் வெளியிட்ட கருத்தின் மூலம் இழந்து விட்டார். திரையுலகில் மூத்த கலைஞராக இருக்கும் சரோஜ்கான் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து வழிநடத்த வேண்டும். அதை விடுத்து இப்படி படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் என்றும் அது தவறு அல்ல என்றும் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக இருக்க நடிகைகள் யாரும் விரும்புவது இல்லை" என்றார்.