
தெலுங்கு மூத்த நடிகரான சிரஞ்சீவி தற்போது அவரது 156வது படமான ‘விஷ்வாம்பரா’ படத்தில் நடித்து வருகிறார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க வசிஷ்டா இயக்கி வருகிறார். ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக பல கட்டங்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் ஸ்டூடியோவில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதே ஸ்டூடியோவில் மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா சிரஞ்சீவி இருப்பதை அறிந்து அவரை காண அவர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்த சந்திப்பு கடந்த பெண்கள் தினத்தன்று நடந்துள்ளது. இதனால் ஸ்ரீலீலாவை பார்த்த சிரஞ்சீவி அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து துர்கா தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட சங்கு ஒன்ரை பரிசாக வழங்கினார். இது தொடர்பாக புகைப்படங்களை ஸ்ரீ லீலா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். இவர் தற்போது ராபின்ஹூட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 28ஆம் தேதி ரிலீஸாகிறது. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் ஒரு படம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.