வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த மாதத்தின் இறுதியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், "மிகப்பெரிய வெற்றியை இந்தப் படம் ஈட்டியுள்ளது. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. ஓடிடி வந்துவிட்டது. இனி திரையரங்கிற்கு கூட்டம் வருமா... கொரோனா நேரத்தில் திரையரங்கிற்கு மக்கள் வருவார்களா என்பதையெல்லாம் தாண்டி நல்ல படம் எடுத்தால் மக்கள் என்றைக்கும் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதை மாநாடு திரைப்படம் நிரூபித்துள்ளது. இந்தப் படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளனர்.
ஜப்பானில் மாநாடு திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் இருந்து விநியோகஸ்தர் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். அந்த வீடியோவில் ஜப்பானைச் சேர்ந்த பெண்மணி மாநாடு படம் சிறப்பாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறியிருந்தார். யாரென்றே தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் பாராட்டுகள் மிகவும் மகிழ்ச்சி தந்தன. நம் ஊர் குழந்தைகள் நிறைய பேர் வந்தான் சுட்டான் ரிப்பீட்டு வசனத்தை டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வசனத்தில் இன்னும் சிறப்பாக நாம் நடித்திருக்கலாமோ என்று நினைக்கும் அளவிற்கு குழந்தைகள் சிறப்பாக நடித்திருந்தனர். இதைத்தான் நான் மிகப்பெரிய விருதாக கருதுகிறேன். ரஜினி சார் தொடங்கி நிறைய பேர் போன் செய்து பாராட்டினார்கள். படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.