தன்னுடைய கிராமியக் குரலின் மூலம் மக்களின் மனங்களை ஈர்த்த பின்னணிப் பாடகர் பாலாவுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
அடிப்படையில் நான் ஒரு பேண்ட் வாத்திய இசைக் கலைஞர். சீனு ராமசாமி சாருடைய அறிமுகம் கிடைத்தபோது அவர் என்னைப் பாடிக் காட்டச் சொன்னார். விஜய் சேதுபதி சார் நடிக்கும் படம், யுவன் சங்கர் ராஜா சார் இசையமைக்கும் படம் என்று எதுவும் தெரியாது. பாடிக் காட்டினேன். அங்கேயே உட்கார்ந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடலையும் எழுதினேன். நான் எழுதிய பாடல் சீனு ராமசாமி சாருக்கு மிகவும் பிடித்தது. அந்தப் பாடலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. விஜய் சேதுபதி சார் ஜாலியான மனிதர். அருமையான அனுபவமாக இருந்தது அந்த ஷூட்டிங்.
சிறுவயதிலிருந்தே நான் ஸ்டைலாக இருப்பேன். வறுமையோடு போராடினாலும் எப்போதும் நீட்டாக இருப்பேன். என்னுடைய தந்தை ஒரு பறை இசைக் கலைஞர். ஆரம்ப காலத்தில் என்னை சிலர் நிராகரித்தபோது அதையே எனக்கான உத்வேகமாக மாற்றிக் கொண்டேன். கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து கடைசி நேரத்தில் பாட விடாமல் அவமானப்படுத்திய நிகழ்வுகளும் உண்டு. பலமுறை அழுதிருக்கிறேன். என் கலையைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எனக்குக் கோபம் வந்துவிடும்.
மீண்டும் யுவன் சங்கர் ராஜா சாரின் இசையில் லவ் டுடே படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதீப் ரங்கநாதன் சாரின் வரிகள். அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கடன் தொல்லையால் என் தாய் தாக்கப்பட்ட நிகழ்வுகளை எல்லாம் சின்ன வயதில் நான் பார்த்திருக்கிறேன். நான் பெரிய ஆளாக வரவேண்டும் என்கிற வைராக்கியம் அப்போதுதான் பிறந்தது. ஆனால் படிப்பு வரவில்லை. இன்று என்னுடைய பாடலை உலகமே கேட்கிறது. ஆனால் இறந்துபோன என் தாயால் கேட்க முடியவில்லை. எனக்கும் காதல் திருமணம் தான். என் தாய் தந்தைக்கும் காதல் திருமணம் தான்.
ஏழையாகப் பிறப்பது நம்முடைய தவறில்லை. ஆனால் ஏழையாகவே நாம் இறந்தால் அது நம்முடைய தவறுதான். அயோத்தி படத்தில் நான் பாடி நடித்துள்ள பாடல் என் மனைவிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.