Skip to main content

“உங்களுக்கு அழுத்து போகலையா” - மனம் நொந்த சோனா

Published on 08/03/2025 | Edited on 08/03/2025
actress sona about her cinema life

பிரபல நடிகை சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘ஸ்மோக்’. ஷார்ட்பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் அவரே இந்த சீரிஸை தயாரித்தும் உள்ளார். இந்த சீரிஸ் சோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். இந்த சீரிஸின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சீரிஸ் தொடர்பாக சோனாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது அவர் சினிமாவில் தான் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்த அவர், “நானும் நண்பர்களுடன் பார்ட்டி பண்ணியிருக்கேன். என் சோகத்தை யாரோடும் பகிர்ந்துக்காம இருக்கும் போது தூக்கம் வராம தவிப்பேன். அதனால் தூங்குவதற்காக மது குடிக்க ஆரம்பித்தேன். வழக்கமா எல்லாரும் 25 முதல் 30 வயது வரை என்னென்ன ஜாலியான விஷயங்கள் செய்வார்களோ அதையே தான் நானும் செய்தேன். ஆனால் நான் கவர்ச்சி நடிகை என்பதால் நான் மது குடிப்பது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அம்மா இறந்த பிறகு நான் மது குடிப்பதை நிறுத்தி விட்டேன். என் வலியை கூட புரிஞ்சுக்க மாட்றாங்க. கவர்ச்சி நடிகை சோனா என கூப்பிடுறாங்க. ஏன் கவர்ச்சி நடிகைக்கு ஃபீலிங்ஸ் இருக்காதா?” என்றார்.

பின்பு அவரிடம் கிளாமர் ரோல் நடித்திருந்தது தொடர்பாக கேள்வி கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “சிவப்பதிகாரம், பத்து பத்து படங்களில் கிளாமர் ரோல் என தெரிஞ்சுதான் நடிச்சேன். ஒரு பயமும் இருந்துச்சு. உடனே டைரக்டரிடம் எப்படி வரும் எனக் கேட்டேன். அவர் இப்படிதான் வரும் என எடுத்து காண்பித்தார். அதை பார்க்கும் போது பெரிதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் தியேட்டரில் பார்த்த போது அப்படி இல்லை. அதுக்குப் பிறகு தொடர்ந்து கிளாமர் ரோலாகவே வந்தது. இப்போது கூட மாசத்துக்கு மூணு படம் கிளாமர் ரோலாக வருகிறது. எனக்கே அழுத்துபோச்சு, உங்களுக்கு அழுத்துப்போகலையான்னு சொல்லி அனுப்பிவிடுவேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்