
தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.
இந்நிலையில் கர்நாடகவில் நேற்று நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைத்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் கர்நாடகாவில் மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்படும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் மேகதாது அணை கட்ட ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தெரிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என கன்னட சலுவளி வாட்டாள் பக்ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகா - தமிழ்நாடு எல்லையோரம் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர், பின்பு செய்தியாளர்களிடம், “மேகதாது அணை கட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் அரசியல் செய்வது யாருக்கும் நல்லதல்ல. ஒரு மாதத்திற்குள் மேகதாது அணை கட்ட ஆட்சேபனை இல்லை எனத் தமிழக அரசு சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் முதற்கட்ட போராட்டமாக கர்நாடகாவில் தமிழ் படங்கள் திரையிட விட மாட்டோம்” என்றுள்ளார்.