
ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். பின்பு இந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டிலேயே கவனம் செலுத்தி வரும் அவர், இப்போது ‘டப்பா கார்ட்டல்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகியுள்ள இந்த சீரிஸில் ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 28ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரிஸ் தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய ஜோதிகா, தமிழ் சினிமா குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியிருந்ததாவது, “28 வயதுக்குப் பிறகு நான் எந்த ஒரு பெரிய நட்சத்திரத்துடனோ அல்லது ஹீரோவுடனோ இணைந்து நடித்ததில்லை. அதனால் என்னுடைய கரியரை மேம்படுத்துவது சிரமமாக இருந்தது. அதற்கு வயதும் ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்கள் பெரிய நட்சத்திரங்களை வைத்தே படம் எடுக்கிறார்கள். அந்த காலத்தில் கே.பாலச்சந்தர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தார். ஆனால் இப்போது அப்படி யாரும் எடுப்பதில்லை. அதனால் எங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஒரு நடிகையுடைய பயணம் தமிழ் சினிமாவில் ரொம்ப கடினமாக இருக்கிறது. போராட்டம் நிறைந்ததாகவும் இருக்கிறது” என்றார்.