Skip to main content

“அவமானத்தில் என் மகன்கள் வீட்டிற்கே வரவில்லை” - கண்ணீர் விட்டு பேசிய மனோவின் மனைவி

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
singer mano wife press meet regards his sons beat issue

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் குடிபோதையில் சிறார்களைத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16) இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கிருபாகரனுக்கு தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அந்த சிறுவர்கள் தரப்பில்  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக  புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தாக்குதல் நடத்திய 5 பேரில் பிரபல பின்னணி பாடகர் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹீர் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரஃபீக் மற்றும் சாஹீர் ஆகியோர் வீட்டில் இல்லை என மனோ தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் தலைமைறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. பின்பு அவர்கள் இரண்டு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
 

singer mano wife press meet regards his sons beat issue

இந்த நிலையில் பாடகர் மனோவின் மனைவி ஜமீலா இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நேற்று முன்தினம் எனது மகன்களுடன் வெளியே சென்றோம். அப்போது எங்களை இரு நபர்கள் குருகுரு என பார்த்தனர். அவர்களை பார்த்து ஏன் பார்க்கிறாய் என என் மகன் கேட்டார். சினிமாக்காரங்க தான நீங்க, தெலுங்கு கோல்டி என தகாத வார்தையில் அவர்கள் பேசினார்கள். உடனே என் மகன் எதுக்குடா இப்படி பேசுறீங்க என கேட்டார். உடனே ஒரு பையன், ஓடி போய் ஃபோன் பண்ணிவிட்டு நாளு பேரை அழைச்சிட்டு வந்துவிட்டான். அவர்கள் எங்களை தகாத வார்த்தைகளில் திட்டினார்கள். உடனே நான் சண்டை எல்லாம் வேண்டாம் என சொல்லி என் மகனை கூட்டிட்டு கிளம்பினேன். அப்போது கல்லால் என்னை தாக்கி விட்டார்கள். என் பசங்க இரண்டு பேருக்கும் நல்ல அடி விழுந்துவிட்டது. இதனால் தற்காப்புக்காக என் மகன் கையில் உருட்டுக்கட்டை எடுத்தான். அதற்கு பின்னர் நான்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலிசை வரவழைத்தேன். 

பின்பு என்னுடைய மகன் போலீசில் புகார் கொடுக்கலாம் என்றான். நான்தான் அது எதுவும் வேண்டாம். சிறுவர்கள் மேல் புகாரளித்தால் அவர்களது வாழ்கை வீணாகிவிடும் என்று சொல்லிவிட்டேன். மறுநாள் மருத்துவமனைக்கு சென்ற எனது மகன்கள் வீடு திரும்புவதற்குள் அவதூறு பரப்பிவிட்டனர். இந்த அவமானத்தால் வீட்டிற்கே அவர்கள் வரவில்லை. ஆனால் தலைமைறைவு என சொல்கிறார்கள். அவர்கள் தலைமைறைவாக வேண்டிய தேவை இல்லை. 40 ஆண்டுகளாக என்னுடைய கணவர் திரைத்துறையில் இருக்கிறார். அவரின் நல்ல குணங்கள் குறித்து எஸ்.பி.பி. சொல்லியிருக்கிறார். எனது மகன்கள் மது போதையில் இல்லை. எங்கள் பக்கம் தவறில்லை. அதை நிருபிப்போம்” என கண்ணீருடன் அழுத படி பேசினார்.     

சார்ந்த செய்திகள்