செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்து புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 13ஆம் தேதி தள்ளி போகிறது. இந்த நிலையில் மிஸ் யூ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சித்தார்த் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது அவரிடம், சித்தா படத்துக்கு பிறகு உங்களை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லையே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு டென்ஷனான சித்தார்த், “அப்போ இந்தியன் 2 உங்களுக்கு படமா தெரியலையா. அது ரிலீஸாகி ஆறு மாசம் கூட ஆகல” என பதிலளித்தார்.
உடனே அந்த செய்தியாளர் இந்தியன் 2 சரியாக பேசப்படவில்லையே என கேள்வி கேட்க அதற்கு பதிலளித்த சித்தார்த், “நீங்க பேசலன்னாலும் எங்க வீட்டுல பேசுனாங்க. கமல் சார் கூட நடிச்சிட்ட, ஷங்கர் சார் கூடவும் இரண்டு படம் பண்ணிட்டன்னு சொன்னாங்க. நான் ஜெயிட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா நான் சினிமாலயே இல்லன்னு சொல்றீங்க. நான் தமிழ் சினிமாவுல தான் இருக்கேன். என் வீடு சென்னையில தான் இருக்கு. இங்கதான் வரி கட்டுறேன். இங்கதான் படமும் தயாரிக்கிறேன். வருஷத்துக்கு இரண்டு படம் கொடுத்தும் தமிழ் சினிமாவில் இல்லை என சொல்றீங்க” என்றார்.