ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். பின்பு விஜய்யின் 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு அது கைகூடாமல் போய்விட்டது. இவர் நடிப்பில் கடைசியாக ‘பைரதி ரணகல்’ என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதையடுத்து உத்தரகாண்டா, 45, பைரவனா கோனே பாட மற்றும் ராம் சரணின் 16வது படம் ஆகியவை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கு உடலில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக ‘பைரதி ரணகல்’ பட புரொமோஷனில் உடலில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். பின்பு மற்றொரு பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், சிவ ராஜ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து சிகிச்சை நல்ல படியாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார். அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து, மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் அறுவை சிகிச்சை நடக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அடுத்த மாதம் 26ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்புவேன் என்றும் எமோஷ்னலாக பேசினார். அவருடன் அவரது மனைவி கீதா மற்றும் இளைய மகள் நிவேதா ஆகியோர் சென்றனர். இந்த நிலையில் சிவ ராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டு இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முருகேஷ் மனோகரன் வீடியோ மூலம் கூறியுள்ளார்.