Skip to main content

“அந்த க்ரேன் என் மீது விழுந்திருந்தால்கூட...”- கலங்கிய ஷங்கர்

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் வட இந்தியாவில் நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங், இரண்டாவது கட்டமாக சென்னையில் நடைபெற்றது.
 

shankar

 

 

ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற 'இந்தியன் 2' படப்பிடிப்பில் இன்டஸ்ட்ரியல் கிரேன் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணா, மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்த விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் தப்பித்துள்ளனர். மேலும், திரையுலகினர் பலரும் 'இந்தியன் 2' படபிடிப்பு பலியானவர்களுக்கு இரங்கலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதலும் கூறினர். இதைத் தவிர்த்து, இனிமேல் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

இந்நிலையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் குழுமத் தலைவர் சுபாஸ்கரனுக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், இனிமேல் தயாரிக்கும் படங்களில் கதாநாயகன் தொடங்கி கடைநிலை ஊழியரின் பாதுகாப்பு வரையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் படபிடிப்பு தளங்களில் இருக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் மயிரிழையில் உயிர்தப்பிய இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக விபத்து குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்துத் தூக்கம் வருவதில்லை.

நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால், அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்" என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்