
அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கரு. பழனியப்பன், தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சீமான் பேசுகையில் படக்குழுவினரை வாழ்த்தினார். இடையில் இளையராஜா குறித்து பேசிய அவர், “முதல் படத்திலிலேயே தம்பி இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு இசைஞானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான்.. இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.. எது கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை. தளபதி என்ற ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை விதமான பாடல்கள்.. இது எல்லாம் உருவாக்கியவர் ஒரே ஆள் தான் என்று சொன்னால் உலகில் யாராவது நம்புவார்களா ? அது அவரால் மட்டும்தான் முடியும்.
இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். நம் தாய் பாடிய தாலாட்டு யாருக்கு ஞாபகம் இருக்கிறது.. இன்று 40 வருடங்களாக அவர் பாடல்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையை கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்திற்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்திற்கும் இசையமைப்பார். எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது.
தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரின் மகன்கள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும் சூர்யாவும் கார்த்தியும் தங்கள் திறமையால் தான் வெளிச்சம் பெற்றார்கள். அதேபோல எஸ்ஏ சி யின் மகன் என அறிமுகமானாலும் விஜய் தனது ஆற்றலால் தான் இன்று இவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் உழைப்பு தான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே. எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து தான் சாதனை. சாதனையை வெற்றியின் மூலமாகத்தான் அடைய முடியும்.. வெற்றிக்கு கடின உழைப்பு வேண்டும்” என்று கூறினார்.