
தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கே மாற்றும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து ஒருமனதாக நிறைவேற்றியது. அந்த சட்டத் திருத்தம் ஆளுநருடைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க ஆணையிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை 2023 ஆம் ஆண்டு அணுகியது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, சிறப்பு சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி அவர் நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்கி தீர்ப்பளித்தது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளது. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியதாக உச்சநீதி மன்றத்துக்கும் இதனை முன்னெடுத்ததாக முதல்வருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சத்யராஜ் பேசியதாவது, “மு.க.ஸ்டாலினை முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் எனச் சொன்னேன். அதை இப்போது உச்ச நீதிமன்றமும் வேற ஒரு மொழியில் சொல்லியிருக்கு. அதாவது வேந்தர்-னு சொல்லியிருக்கு. திராவிட கொள்கையின் படி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அப்படின்னா அந்த மன்னர்களில் ஒருவரை வேந்தர்-னு சொல்லலாம். இன்னும் ஒருபடி மேல போய் உழைக்கும் வர்கத்துக்காக, கடைக்கோடி சாதி எனும் கருதப்படும் வர்கத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிட இயக்கம். அப்படி பார்த்தால் இந்த குப்பைகளை எல்லாம் அருமையா ஒதுக்கி தள்ளுறாரு பாருங்க, நம்ம முதல்வர், அவரை உலகத்தின் மிகச் சிறந்த தூய்மை பணியாளர் என்றும் சொல்லலாம். தமிழ்நாட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டு இருப்பது தான் அவருடைய வேலையே.
இங்க வேலை செய்யும் வடமாநிலத்தவர்களிடம் நீ மறுபடியும் ஊருக்கு போறியா, இல்ல இங்கேயே இருக்குறியான்னு கேட்டுப் பாருங்க. நான் கேள்விபட்டேன். அவங்க எல்லாம் அவங்களுடைய பிள்ளை குட்டிகள கூட்டி வந்து நம்ம பள்ளிகூடத்துல சேர்த்து தமிழும் ஆங்கிலமும் கத்துக் கொடுத்துகிட்டு இருக்காங்க. வீட்ல அவங்க தாய் மொழியை பேசிட்டு இருக்காங்க. அவ்வளவு சிறப்பான ஆட்சி இங்க நடந்துகிட்டு இருக்கு. நான் பெருமையோடு இந்த தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண மனிதன் என்கிற நிலையில் இருந்து முதல்வரை அவர்களை வாழ்த்திகிறேன்” என்றார்.