'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சர்வானாந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக அமலா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசுகையில், “இந்த இயக்குநர் கதை கூறியதைக் கேட்கும்போதே இது மாதிரி யாரும் கதை கூறியதில்லையே என்று தோன்றும். இடையில் கரோனா வந்தாலும், படம் பொறுமையாக வெளியானாலும் நன்றாக வர வேண்டும் என்பதில் எஸ். ஆர். பிரபு பிடிவாதமாக இருந்தார். அவருக்கு திருப்தி ஆகும்வரை விடமாட்டார். இப்படம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இப்போதே டைம்மிஷினை எடுத்துக்கொண்டு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பயணித்து படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
ஷர்வானந்த் இந்த படம் மூலம் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர். எனது அப்பா அமலா மேடமின் பெரிய விசிறி. நியாயமாக அமலா மேம் அக்காவாக நடித்திருக்க வேண்டும். ஆனால், அம்மாவாக நடித்திருக்கிறார். ரீத்து வர்மாவுடன் ஒரு நாள்தான் படப்பிடிப்பு இருந்தது. அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. நாசர் சார் எல்லோரையும் நன்றாக கவனித்துக் கொள்வார். நடிப்பைத் தாண்டி நன்றாக சமைப்பார். ஹித்தேஷ் என்னை போலவே இருக்கிறார். அவருடைய அப்பாதான் மகன் பெரிய பாத்திரத்தில் நடித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்” எனக் கூறினார்.