![bdbxbnxbf](http://image.nakkheeran.in/cdn/farfuture/AHcHHMZjH-TXXydtmkYBumUQjAV3JDveHT9DNsfGuI4/1622028108/sites/default/files/inline-images/maxresdefault_144.jpg)
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
![shfshshs](http://image.nakkheeran.in/cdn/farfuture/E5GzRfDG7pT-tA1dml_VooU2vAu9ianmYH8gmFtf92U/1622029096/sites/default/files/inline-images/Untitled-1_220.jpg)
அதன்படி, 'ஆர்.ஆர்.ஆர்' படம் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை, பிரபல நிறுவனமான 'லைகா' கைப்பற்றியுள்ளதாகச் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இப்படத்தின் இதர உரிமைகளுக்கும் தற்போது கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த படத்தின் ஹிந்தி மொழி தொலைக்காட்சி மற்றும் மற்ற மொழி டிஜிட்டல் உரிமத்தை சுமார் 325 கோடி ரூபாய்க்கு ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன் மற்ற தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஒரு இந்தியப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் இந்த அளவுக்கு விலைபோனது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.