தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை அடுத்தாண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் நடிகர் டெல்லி கணேஷ், நடிகை சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதனிடையே நடிகர் சங்கத்தின் சார்பில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவர் ரோகிணி, பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “விசாகா கமிட்டியை 2019ஆம் ஆண்டே உருவாக்கி விட்டோம். அதன் மூலம் சங்கத்தில் வந்த சில பாலியல் புகார்களை தீர்த்து வைத்திருக்கிறோம். இது பற்றி பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியே தெரியாமல் பாதுகாக்கும் நோக்கத்தில் வெளியே நாங்கள் சொல்லவில்லை.
இப்போது பாலியல் புகார் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். எந்தப் புகார் என்றாலும், சங்கத்தை அணுகி புகார் கொடுங்கள். மற்றபடி, பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். அதில் பேசுவதால் எந்தப் பலனும் இல்லை. புகார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்படும். புகாரளிப்பதை எளிமையாக்க, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண்களுக்கும் நடிகர் சங்கம் எப்போதும் ஆதரவாக இருக்கும்” என்றார்.