'மதராசபட்டினம்', 'தாண்டவம்', 'ஐ', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். பின்பு, தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அதே ஆண்டு இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்க, பிறகு திருமணம் செய்து கொள்ளாமலே சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இப்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எமி ஜாக்சன் மீண்டும் நான்கு வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இயக்குநர் ஏ.எல் விஜய், அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படும் படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.