பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாண்டன். தமிழில் பி.வாசு இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான சாது படத்தில் அறிமுகமாகியிருந்தார். பின்பு கமலுடன் ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார்.
மும்பை ககர் பகுதியில் வசித்து வரும் இவர், மது போதையில் சிலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு, அவரது வீட்டில் ரவீனா டாண்டனின் டிரைவர், காரை பார்க்கிங் செய்யும் போது, ரிவர்ஸ் எடுக்கையில் அப்பகுதியில் சாலையோரம் வந்த குடும்பத்தினர் மீது மோதியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உடனே அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் அந்த டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த ரவீனா டாண்டன், அந்த குடும்பத்தினருடன் வாதிட்டுள்ளார். பின்பு அவரை அந்த குடும்பத்தினர் சூழ்ந்து கொள்ள, வாக்குவாதம் முற்றி அந்த குடும்பத்தினர் டிரைவரை அடிக்க முயல்கின்றனர். தடுத்த ரவீனா டாண்டன், “அடிக்காதீங்க, அடிக்காதீங்க” என கத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது மூக்கில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிவதாக ஒரு பெண்மணி சொல்கிறார். மேலும் சம்பவத்தின் போது ரவீனா டாண்டன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ரவீனா டாண்டன் மீது புகார் கொடுத்துள்ளனர். இது குறித்த விசாரித்த காவல் துறையினர், ரவீனா டாண்டன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, ரவீனா டாண்டன் கார் யார் மீதும் மோதவில்லை, யாரும் காயமடையவில்லை, அதோடு அவர் மது போதையிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கார் யார் மீதும் மோதவில்லை என்பது பதிவாகியுள்ளது.