
விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ். இவர் கடந்த மாதம் விமானம் மூலம் துபாயில் இருந்து பெங்களூரூவுக்கு வந்த போது சோதனையில் 14.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சோதனை செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் ரன்யா ராவின் நண்பரும் தெலுங்கு நடிகருமான தருண் ராஜூ மற்றும் தொழிலதிபர் சாகில் ஜெயின் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்து அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் வருகிற 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரன்யா ராவ், ரூ.38 கோடிக்கும் அதிகமான ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ரன்யா ராவ் நீதிமன்றத்தை தொடர்ந்து நாடி வருகிறார். இதுவரை இரண்டு முறை அவர் பெங்களூரு நீதிமன்றங்களை நாடிய நிலையில் அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மூன்றாவது முறையாக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.