நடிகர் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்த 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரசிகர்கள் முன்னிலையில் பெரும் கட்சி மாநாடு போல் அரங்கேறிய இந்த விழாவில் தன் அரசியல் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சற்று ரிலாக்ஸாக தன் பழைய நினைவுகளையும், சமீபத்தில் தன் சினிமா கேரியரில் ஏற்பட்ட சறுக்கல்களையும் பற்றி பேசுகையில்...."இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான் என்று பேசிய சிறிது நேரத்திற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட சினிமா சறுக்கல்கள் பேசினார்.
அதில்...ராணா (கோச்சடையான்) படம் சரியாக போகவில்லை. இந்த படம் ஆரம்பிக்கும் போது எனக்கு உடல் நலம் சரியில்லை அப்போது என் மகள் சவுந்தர்யா என்னிடம் வந்து நீங்கள் இப்படத்திற்காக 8 நாட்கள் நடித்தால் போதும் என்றார். அதற்கு நான் உடனே சம்மதித்து நடித்தேன். பின்னர் சொன்னது போல படம் தயாராகவில்லை. சில பட்ஜெட் பிரச்னை காரணங்களாலும், மேற்கொண்டு செலவுகள் அதிகமாவதாலும் படத்தை அப்படியே ரிலீஸ் செய்தோம். இதிலிருந்து நான் ஒன்று கற்றுக்கொண்டேன் வாழ்க்கையில் புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்களிடம் ஆலோசனை கேட்க கூடாது. அவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவர். ஆனால் நேரம் வரும்போது எந்த பக்கம் செல்லுவது என்று ஜன்னல், கதவு தெரியாமல் அவர்கள் ஓடி விடுவார்கள்.
பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும்சரியாக போகவில்லை. படத்திலும் சரி, வாழ்க்கையில் சரி நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் எதுவும் சரி வராது என்று இதிலிருந்து கற்றுக்கொண்டேன். இப்படி தோல்விகள் தொடர்ந்த நிலையில், உடனே ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. 40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சால்ல முடியாது. வயிறு எரியத்தான் செய்யும். நான் என்ன பண்ண இந்த குதிரையை அந்த ஆண்டவனும், ரசிகர்கள் நீங்கள் தான் ஓடவைக்கிறீர்கள். யார் என்ன சொன்னாலும் என் வழியில் நான் போய்க் கொண்டே இருப்பேன். பின் சில காலம் கழித்து சவுந்தர்யா ரஞ்சித்தை அறிமுகம் செய்தார்.
அவர் ஒரு டான் கதையை வைத்திருப்பதாக சொன்னார். ஆனால் நானோ ஒரே பாட்ஷா தான் வேறு டான் கதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டேன். பின்னர் மலேசியா அன்டர்வேர்டு டான் என்று அவர் கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன். அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை. அவர்மேல் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதனால் அந்த படம் பண்ணோம். 'கபாலி' படம் வெற்றி பெற்றது. பின்னர் ஒரு நாள் என் இளைய மகள் ஐஸ்வர்யாவிடம் சாதாரணமாக பேசும்போது என்னம்மா உங்க கம்பெனியில் (வுண்டர்பார்) உங்க கணவர் மட்டும் தான் ஹீரோவா பண்ணுவாரா..? எங்களையெல்லாம் பார்த்தா ஹீரோவா தெரியலையா என்று கேட்டேன். அதற்கு என் மகள் தனுஷிடம் நீங்களே கேட்டுக்கோங்க என்று சொல்ல நானும் தனுஷிடம் கேட்டேன் உடனே அவரும் ஓகே சொல்லி அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தோம்.
நான் ரொம்ப காலம் வுண்டர்பார் நிறுவனத்தை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவர்கள் நன்றாக வேலை செய்கின்றனர். அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்கின்றனர். என் மருகன் என்பதற்காக சொல்லவில்லை. தனுஷ் தங்கமான பையன். தன் அப்பா, அம்மாவை மதிக்கிறார். மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். பின்னர் தனுஷ் சொல்லி வெற்றிமாறன் எனக்கு ஒரு கதை சொன்னார், கதை எனக்கு பிடித்தது, அது முழு அரசியல் படம். நான் அப்போது அரசியலுக்கு வரவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை. பின்னர் நானும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டேன் எதுவும் ஒத்துவரவில்லை. ஒரு கட்டத்தில் எதுக்கு மற்றவர்களையே கேட்கவேண்டும் நமக்கு தான் ரஞ்சித் இருக்கிறாரே என்று மறுபடியும் ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா படம் உருவானது. மேலும் இது ரசிகர்களாகிய உங்களுக்கான படம், அதே சமயம் ரஞ்சித் படமாகவும் இருக்கும். மேலும் காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் படத்தில் அரசியல் இருக்கும். மேலும் அரசியல் பற்றிய பேச நேரம் இப்போது வரவில்லை. நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன்" என்றார்.