Skip to main content

"11.40 ஆச்சு, 11.50 ஆச்சு ஆல் வரவேயில்லை" - நெல்சன் கமிட்டானதை கதையாகச் சொன்ன ரஜினி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

rajini speech at jailer audio launch

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இதில் ரஜினி பேசுகையில், "மூன்று வருஷத்துக்கு அப்புறம் நாம் சந்திக்கிறோம். கரோனோவிற்கு பிறகு உங்களை சந்திக்கிறதில் ரொம்ப மகிழ்ச்சி. அண்ணாத்த முடிந்த பிறகு ஜெயிலர் தொடங்க தாமதமாகிவிட்டது. அதற்கு சரியான சப்ஜெக்டும், சரியான இயக்குநரும் கிடைக்கவில்லை. சினிமாவை அப்பாவாக சொன்னால் இயக்குநரை அம்மாவாக சொல்லலாம். இயக்குநரால் தான் ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும். சிவாஜி சார், ஏ.பீம்சிங், ஏ.பி. நாகராஜன் உள்ளிட்ட சிலரை வைத்திருந்தார். இவர்கள் எல்லாம் இல்லை என்று சொன்னால் சிவாஜி சாருக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அதேபோல்தான் நம்பியார் சார், எம்.ஜி.ஆர் சார். அதுவும் எம்.ஜி.ஆர் சாருக்கு தனி ரகம். அவரே ஒரு டைரக்டர். 

 

அதே போல தான், என்னுடைய கரியரிலும் இயக்குநர்கள்தான் என்னை மேலே மேலே கொண்டு போனார்கள். 48 வருஷமா சினிமாவில் இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் இயக்குநர்கள். முத்துராமன் சாரில் இருந்து ஆரம்பிச்சு, மகேந்திரன், ராஜசேகர், சுரேஷ் கிருஷ்ணன், பி.வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஷங்கர், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ்... அந்த வரிசையில் இப்ப நெல்சன். 

 

அண்ணாத்த  பிறகு நிறைய இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டேன். பல பேர் பாட்ஷா மாதிரி இருக்கும், அண்ணாமலை மாதிரி இருக்கும் என சொல்வார்கள். அதெல்லாம் ஏற்கனவே நடித்தது போலவே இருக்கும். சிலர் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது எந்த அளவுக்கு இருக்குமென்று ஒரு டவுட். இன்னும் சிலர் ஒரு லைன் சொன்னார்கள். சரி, இதை டெவலப் பண்ணி கொண்டு வாங்க என்று சொல்லும் போது அது டெவலப் பண்ணி கொண்டு வந்தால் அது வேறு மாதிரி இருக்கும். இப்படிப் பலர் ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் கதை சொல்வார்கள், அவர்களிடம் இல்லை என்று சொன்னால் வருத்தப்படுவார்கள் என முடிவெடுத்து கதையே கேட்க வேண்டாம் என ஒரு கேப் விட்டுட்டேன். 

 

அதன் பிறகுதான் சன் பிக்சர்ஸ் கண்ணன் ஃபோன் பண்ணி, நெல்சன் உங்களுக்காக நல்ல சப்ஜெக்ட் வச்சிருக்கான். நீங்க கேளுங்க என்று சொன்னார். நெல்சனுடைய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்ல படங்கள். நான் அவரிடம் லைன் கேட்கிறேன், என்றேன். உடனே நெல்சன், பீஸ்ட் படத்திற்காக நார்த் இந்தியாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார். அங்கு 20நாள் படப்பிடிப்பு நடத்தியதும் உங்களுக்கு வந்து சொல்வார் என்றார். நானும் ஓகே சொல்லிவிட்டு வெய்ட் பண்ணினேன். 

 

20 நாள் ஆச்சு. அவர் திரும்பி வந்த பிறகும் கூட வரவில்லை. விசாரித்தால் இன்னும் 10 நாள் டைம் கேட்கிறார் என்றார்கள். சரி பரவாயில்லை என்று சொல்லி 10 நாள் கழிச்சு, ஒரு 10 மணிக்கு வர சொன்னேன். அதற்கு இல்லை சார், அவர் தூங்க லேட்டாகிடும் என்றார்கள். என்னடா இது ஆரம்பத்திலேயே... சரி எப்ப வருவார் என கேட்டேன். 11.30 என்றார்கள். சரி ஓகே. 

 

11.30 ஆச்சு ஆளே வரவில்லை, பின்பு 11.40 ஆச்சு, 11.50ஆச்சு அப்பையும் வரவில்லை. அப்புறம் அவருடைய கார் உள்ளே வந்துச்சு. அங்கிருந்து வீட்டிற்கு வர அதிகபட்சம் 1 நிமிஷம் ஆகும். 5 நிமிஷம் ஆகியும் உள்ளே வரவில்லை. பின்பு என்னடா என்று பார்த்தால், ஃபோனில் ஏதோ பாத்துக்கொண்டிருந்தார். அப்புறம் வந்து உட்கார்ந்தார். என்ன சாப்பிட்ரீங்க என்று கேட்டதற்கு ஒரு நல்ல காஃபி சொல்லுங்க...  காஃபி வர கேப்பில் என்னை பார்த்தார். நான் வேஷ்டி பணியனோடு இருந்தேன். இந்தாளு ஹீரோவா...என்று பார்த்தார். அப்புறம் லைன் சொன்னார். ரொம்ப புதுசா இருந்திச்சு. அப்புறம் முழு கதையை ரெடி பண்ண கொஞ்சம் டைம் கேட்டார். பீஸ்ட் வெளியான பிறகு முழு கதை சொன்னார். முன்பு சொன்னதை விட 100 மடங்கு நல்லா இருந்துச்சு" என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்