Skip to main content

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்