'இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா அடுத்ததாக 'குருதி ஆட்டம்' படத்தில் நடிக்கவுள்ளார். 'மேயாதமான்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கடைக்குட்டி சிங்கம்' படம் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரியா பவானி சங்கர் இதில் ஆசிரியராக நடிப்பது மட்டுமல்லாமல் நாயகியாகவும் நடிக்கிறார். மதுரை பின்னணியில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தில் ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கி, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்நிலையில் நாயகி பிரியா பவானி சங்கர் குறித்து இயக்குனர் ஸ்ரீகணேஷ் பேசும்போது....
"இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எதையும் யோசிக்காமல் உடனே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பிரியா அதில் விதிவிலக்கானவர். கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார். உண்மையில் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின் படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்" என்றார்