அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்தப் பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி - ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும் இயக்குநர்களுமான புஷ்கர் - காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் பேசுகையில், ''இந்த நாள் எங்களுக்கு சிறப்பான நாள். 'சுழல்' எனும் ஒரிஜினல் தமிழ் தொடரை தொடர்ந்து, 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடர் தயாராகி இருக்கிறது. இதனை புஷ்கர்-காயத்திரி தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். இந்தத் தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 240 பிராந்தியங்களில் வெளியாகிறது. இந்தப் படைப்பு எங்களுக்குச் சிறப்பானது; அழகானது; விறுவிறுப்பானது; வரம்பற்ற எல்லைகளைக் கொண்ட படைப்பு இது. பார்வையாளர்களுக்கு மாயஜாலத்துடன் கூடிய புதிய அனுபவத்தை அளிக்கக் கூடியது.
ஒவ்வொரு அத்தியாயங்களையும் பார்வையாளர்களால் யூகிக்க முடியாத வகையில் சுவராசியமான திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சிறிய நகரம் ஒன்றின் பின்னணியில் இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது. இந்தத் தொடரில் உண்மையைத் தேடி காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் பயணத்தில், பொய்களைப் பேசும் மனிதர்கள், உண்மையற்ற விசயங்களைப் பேசும் மக்கள் எனப் பல சுவாரசியமான அடுக்குகள் இடம் பெற்றுள்ளன. இறுதியில் அவர் உண்மையைக் கண்டறிந்தாரா? இல்லையா? எனப் பரபரப்பாகச் செல்லக்கூடிய தொடர் தான் 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் வெளியிட்டிற்காக ஆவலுடன் மற்றவர்களைப் போல் நானும் காத்திருக்கிறேன்'' என்றார்.
இந்தத் தொடரின் தயாரிப்பாளர்களான புஷ்கர்- காயத்ரி பேசுகையில், ''பிரைம் வீடியோவுடன் எங்களுக்கு இது இரண்டாவது பயணம். ப்ரைம் வீடியோ தரமான படைப்புகளை சர்வதேச அளவிலான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒப்பற்ற சிறந்த டிஜிட்டல் தளம். 'வதந்தி' தொடரின் கதைக் கருவைச் சொன்னவுடன், இதன் மீது உள்ளார்ந்த ஈடுபாடுடன் அக்கறையும் செலுத்தி, படைப்பிற்கு தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கும் சிறப்பான அனுபவத்தை அளித்திருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா சிறந்த மனிதர். அளவற்ற நேர் நிலையான ஆற்றலை கொண்டவர். இந்தத் தொடரில் நடிப்பின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ், லயோலா கல்லூரியில் வகுப்பறை தோழர். பட்டப் படிப்பு முடித்தவுடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராகச் சேர்ந்தவர். அதனால், அவருக்கும் எங்களுக்குமான இணக்கம், தொடர்பு அதிகம். இந்தத் தொடரில் சஞ்சனா என்ற இளம் பெண்ணை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்.
நீண்ட கால அவகாசம் கொண்ட வலைதள தொடர் என்பது தமிழுக்கு இப்போதுதான் அறிமுகமாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழுக்கு இது ஒரு புதிய படைப்புலகமாக அறிமுகமாகியிருக்கிறது. இதற்காக அமேசான் பிரைம் வீடியோவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுவது என்பது சந்தோசமான அனுபவம். பொதுவாக தமிழ் திரையுலகத்தில் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்திற்கான திரைப்படத்திற்காகத்தான் திரைக்கதை எழுதுவோம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆறு அல்லது ஆறரை மணி நேரம் கொண்ட எட்டு அத்தியாயங்களுக்கான கதையை எழுதுவது என்பது சவாலானது.
எங்களது தயாரிப்பில் வெளியான சுழல் தொடரிலேயே நாங்கள் கடினமாக உழைத்து தான் திரைக்கதை எழுதினோம். ஆனால் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எட்டு அத்தியாயங்களுக்கான முழு திரைக்கதையும் எழுதி, அவரே இயக்கியிருக்கிறார். ப்ரைம் வீடியோவைச் சேர்ந்த அபர்ணா புரோஹித் மற்றும் ஷாலினி முழுவதும் படித்து, தொடர் தயாரிப்புக்கு அனுமதி அளித்து, இறுதி வரை எங்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது.
இந்தத் தொடரை 240 பிராந்தியங்களுக்கும் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டிலுடனும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கு ப்ரைம் வீடியோவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் சொல்லும் கதையை ஜப்பானியர்கள், தென்கொரிய மக்கள், தென் அமெரிக்கா மக்கள் ஆகியோர் பார்வையிடவிருக்கிறார்கள்.
இது அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தால் மட்டுமே அளிக்க முடியும். அதிலும் நீண்ட நேர கதை சொல்வதற்கு ஏற்ற.. இம்மாதிரியான வலைதள தொடர்களை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்காக அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்கிறேன். இது போன்ற ஆச்சரியங்கள் தான் 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் பயணத்தின் நேர்த்தியான அழகு என நான் நினைக்கிறேன்'' என்றனர்.