தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது. இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.