பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று (15.07.2024) வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போது படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியில், பா.ரஞ்சித், மாளவிகா மோகனன் நடிப்பு குறித்து பேசுகையில், “மாளவிகாவை அவர் நடித்த ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’ படம் பார்த்து தான் தேர்ந்தெடுத்தேன். பின்பு லுக் டெஸ்டுக்கு அழைத்தேன். ஆரத்தி கதாபாத்திரத்திற்குச் சரியாக இருந்தார். ஆனால் உடல்ரீதியாக அவரால் ஆரத்தியாக உருவெடுக்க முடியுமா, என்பதை நான் யோசிக்கவில்லை. ஒரு ஆர்டிஸ்டாக அவர் பண்ணிவிடுவார் என ஷூட்டிங்கிற்கு போய்விட்டேன். அவருக்கு முதல் காட்சியே சண்டைக் காட்சி. அந்த சண்டையை நல்ல பயிற்சி பெற்றவர்களே பண்ண முடியாது. மாளவிகா ஸ்டண்ட் பயிற்சியும் பெறவில்லை. இருந்தாலும் அவரை நான் பண்ணச் சொன்னேன். அவரும் பண்ணினார். ஆனால் தொடர்ந்து அவரால் பண்ண முடியவில்லை.
இரவு பகலாக அவர் பயிற்சி எடுத்துக்கொண்டே இருந்தார். அது அவருக்குப் பயங்கரமான வலியைக் கொடுத்தது, ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டார். அதை வெளியில் காண்பித்துக்கொள்ளவே இல்லை. ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது மாளவிகா மீது பயங்கரமான ஒரு நம்பிக்கை எனக்கு ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருக்குச் சிறிது பிரேக் கொடுத்து சிலம்பம் பயிற்சியாளரை வரவழைத்து, முறையான பயிற்சி கொடுத்துப் பண்ணவைத்தோம். அதன் பிறகு அவர் செய்த ஸ்டண்ட் பயங்கரமானதாக இருந்தது. படத்தில் அது நன்றாக வந்திருக்கிறது. மாளவிக்கா உழைப்பைக் கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள்” என்றார்.