
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜென்டில்வுமன்’. கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுகபாரதி வசனங்கள் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இயக்குநர் த.செ.ஞானவேலும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “லிஜோவுக்காகத் தான் வந்தேன், அவர் மிகச்சிறந்த ஆர்டிஸ்ட், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பிரமிப்பைத் தருகிறது. இயக்குநரிடம் ஏன் ஜென்டில்வுமன் எனப் பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டேன். இந்த மாதிரியான தலைப்புகளில் ஒன்று ஏதாவது கருத்து இருக்க வேண்டும், இல்லை எனில் கவன ஈர்ப்பு இருக்க வேண்டும். அவர் மிக அற்புதமான பதில் ஒன்றைத் தந்தார். சராசரி வழக்கத்தை உடைப்பது, இதுவரை ஜென்டில்மேன் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம் அதை மாற்ற ஜென்டில்வுமன் வைக்கலாம் என வைத்தேன் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு ஸ்டீரியோ டைப்பை உடைப்பது சமூகத்தில் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். கலைஞனாக ஸ்டீரியோ டைப்பை உடைப்பது மிகவும் முக்கியம். ஸ்டீரியோ டைப்பை உடைத்துத் தான் அனைத்து மாற்றங்களும் வந்துள்ளது. அதனால் இன்றைய சமூகத்தில் அந்த முயற்சியில் வரும் அனைத்து படைப்புகளையும் நாம் வரவேற்க வேண்டும்.