விஜய்யின் அரசியலில் வருககைக்கு பிறகு முதல் படமாக உருவாகியுள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனத் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய் டி ஏஜிங் கெட்டப்பிலும், மறைந்த விஜயகாந்தின் தோற்றத்தையும் மறைந்த பவதாரிணி குரலையும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் தொடங்கிய இப்படத்தைப் பேனர் வைத்தும் பாலாபிஷேகம் செய்தும் மேளதாளத்துடனும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் காசி திரையரங்கில் விஜய் பேனர் முன்பு இளம் தம்பதியினர் மாலை மாற்றி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தம்பதியினர் அளித்த பேட்டியில், “சைதை கிழக்கு பகுதி செயலாளராக நான் இருக்கிறேன். ஒவ்வொரு விஜய் படம் ரிலீஸாகும் போதும் அருகில் இருக்கும் ராஜ் தியேட்டரில்தான் கொண்டாடி வருவோம். அந்த தியேட்டர் புதுப்பித்து வருவதால் காசி தியேட்டருக்கு வந்திருக்கிறோம். இந்த தியேட்டரில் விஜய் பட ரிலீஸை எப்போதும் கொண்டாடி வருபவர் சைதை மேற்கு பகுதி செயலாளர் சேது.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. விஜய் படத்திற்கு வெயிட் பண்ணி முதல் நாள் முதல் காட்சிக்கு வந்துள்ளோம். தளபதிக்காக சம்பாதிக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அவர் பேர் சொல்லி மக்களுக்கு செய்யவேண்டும் என்று எல்லா விஷயங்களையும் எடுத்து பார்த்து வருபவர் சைதை மேற்கு பகுதி செயலாளர்” என்று மாலை அணிந்தபடி சந்தோஷமாக பேசினர்.