பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவருடன் மோதி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பியது. அவர் தகுதி நீக்கத்திற்கு முன்பாக உடல் எடையைக் குறைக்க கடும் உடற்பயிற்சியை மேற்கொண்டதின் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் "என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, உங்களின் கனவு, எனது தன்னம்பிக்கை அனைத்தும் இன்று உடைந்துவிட்டது. 2001-2024 ஒலிம்பிக் போட்டிக்கு குட் பை, எனக்கு இதற்குமேல் வலிமை இல்லை" என வினேஷ் போகத் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் போகத்தின் தகுதி நீக்க விவகாரம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர்கள், சக ஒலிம்பிக் போட்டியாளர் எனப் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகிலிருந்து பிரகாஷ் ராஜ், சமந்தா, டாப்சி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பாலிவுட் திரைப்பிரபலங்களான கரீனா கபூர், விக்கி கௌஷல், ப்ரீத்தி ஜிந்தா, ஆலியா பட் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மலையாள நடிகர் மோகன் லால் இந்த விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கடினமான வீழ்ச்சியிலிருந்தும் சாம்பியன்கள் எழுவார்கள். நீங்கள் உண்மையான போராளி, உங்கள் கம் பேக் முன்பு இருந்ததைவிட வலுவாக இருக்கும் என நம்புகிறோம். இந்தியா உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது” என்று அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகை நயன்தாராவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “தைரியமான வீராங்கனையே... நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை. எந்த சாதனையையும் மிஞ்சும் ஆழமான அன்பைப் பரிசாகப் பெற்றுள்ளீர்கள். அந்த அன்பை தலை நிமிர்ந்து போற்றுங்கள்” என்று ஆறுதல் தெரிவித்தார். இப்போது மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.