விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார். மேலும் விவேக், மோகன்ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிச்சென்றது. இந்நிலையில் மே 19 ஆம் தேதியான நாளை ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் ப்ரிவியூ ஷோ நடந்த நிலையில் அதில் படக்குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்னு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பை கேட்டவுடனே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. காரணம் நமது தமிழ் இலக்கியத்தில் மற்றும் சங்க இலக்கியத்தின் முதல் வரி. இன்று ஐக்கிய நாடுகள் சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுதான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழுக்குரிய பெருமையையும் தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையையும் அடையாளம் காட்டியிருக்கிறது. அந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன்.
விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் நல்ல முயற்சி எடுத்துள்ளார்கள். இந்திய நாட்டில் இன்று சமூகம் மாறிக் கிடக்கின்றது. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகளை தமிழ்நாட்டிலும் பேசுகிறார்கள். அதே போல் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனையை வெளியுலகத்தில் பேசுகிறார்கள். இப்படி பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது சொல்லாலோ இணைக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய இப்படத்தை பாராட்டுகிறேன்" என்றார்.