எறும்பு படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோவிற்காக சந்தித்தோம். அப்போது படத்தின் இயக்குநர் மற்றும் படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கலந்துகொண்டு பல்வேறு விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கிராமப்புரத்தைச் சேர்ந்த கேரக்டர் இது. இதற்கான லுக் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பேசி முடிவு செய்தோம். என்னுடைய கேரக்டருக்கு விக் வைக்க முடிவு செய்தோம். இயக்குநரும் நல்ல சுதந்திரம் கொடுத்தார். வெள்ளித்திரை படத்துக்குப் பிறகு சார்லியுடன் நான் இணைந்து நடிக்கும் படம் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.
ஹாலிவுட்டில் நான் இருந்திருந்தால் நிறைய ஆஸ்கர் விருதுகள் வாங்கியிருப்பேன் என்று ஒருவர் சொன்னது அவருடைய அதீத அன்பு. நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு ஆஸ்கர் வழங்கவில்லை. அவருக்கு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. யாருக்கு என்ன விருது கிடைக்கிறதோ கிடைக்கட்டும். விருதுகளை வைத்துக்கொண்டு அரிசி கூட வாங்க முடியாது. மக்களின் பாராட்டு தான் மிகவும் முக்கியம். மிருகங்களுக்கு கூட பாடி லாங்குவேஜ் இருக்கிறது.
ஓடிடி வந்ததும் நல்ல விஷயம்தான். தெருக்கூத்து, மேடை நாடகங்கள், டிவி என்று ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியின் போதும் அதற்கான எதிர்ப்பும் இருந்திருக்கிறது. அதுபோல் தான் ஓடிடி. எதன் காரணமாகவும் சினிமா அழியாது. இவை அனைத்தும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி. காலத்துக்கேற்ற மாற்றம் அனைத்திலும் வேண்டும். இளைஞர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட இன்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எங்களுடைய காலத்தில் அப்படி இல்லை.
வடிவேலுவுடன் நடித்த பலர் இன்று அவர் பற்றி தவறாகப் பேசுகின்றனர். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் குறித்து பேசக்கூடாது. அவர் உச்சத்தில் இருந்தபோது அவரோடு சேர்ந்து அந்தப் பலனை அனுபவித்துவிட்டு இன்று இவ்வாறு பேசுவது தவறு. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. குறைகள் இல்லாத மனிதன் இல்லை. வடிவேலுவின் காமெடிகளை இன்றும் நான் ரசிக்கிறேன். அவரோடு நான் இணைந்து நடித்திருக்கிறேன். அவர் எனக்கு மிகப்பெரிய நண்பனும் இல்லை, மிகப்பெரிய விரோதியும் இல்லை. சினிமாவில் அனைவருமே எனக்கு நண்பர்கள் தான்.