
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருக்க முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியான நிலையில் அடுத்ததாக ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். அந்த வகையில் சுந்தர் சி பேசியதாவது, “இந்த படத்திற்கு விதை போட்டது வடிவேலு. சின்ன உரையாடலில் தொடங்கிய இப்படம் இப்போது முழு படமாக உங்கள் முன்னாடி வந்து நிற்கிறது. இந்த படம் உண்மையிலே தமிழில் இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒரு ஜானர். மனி ஹெய்ஸ்ட் போன்று நம்ம ஊர் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு படம்.
ஒரு பெரிய சிட்டியில் அறிவுப் பூர்வமாக இல்லாமல் சின்ன ஊரில் சராசரியான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் டைட்டில் மட்டும் சிக்காமலே இருந்தது. ஒரு நாள் வடிவேலு டைட்டில் என்னவென்று கேட்டார். கேங்க்ஸ்டர் மாதிரி ஸ்டைலிஷா சின்னதா ஒரு டைட்டில் வேணும், ஆனா எதுவுமே செட் ஆகமாட்டிங்குது என்றேன். அதற்கு கேங்கர்ஸ் என அசால்டாக சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் வெள்ளந்தியா சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பிடித்தது. பின்பு அதையே டைட்டிலாக வைத்து விட்டோம்” என்றார்.