
தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கைவசம் விஜய் நடிக்கும் ஜனநாயகன், சூர்யா நடிக்கும் ரெட்ரோ ஆகிய படங்களை வைத்துள்ளார். மேலும் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்திலும் நடித்துள்ளார். அதோடு ராகவா லாரன்ஸின் காஞ்சனா நான்காம் பாகத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரெட்ரோ படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் மற்றும் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘கனிமா’ பாடலில் இடம் பெற்ற நடனம் ரீல்ஸில் ட்ரெண்டானது. படம் வெளியீட்டுக்கு இன்னும் வெகு நாட்களே உள்ள நிலையில் தற்போது போஜா ஹெக்டே புரொமோஷனில் இறங்கியுள்ளார். அந்த வகையில் ஒரு பேட்டியில் ரெட்ரோ படத்தை தாண்டி நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சோசியல் மீடியா குறித்தான கேள்விக்கு பூஜா ஹெக்டே பதிலளிக்கையில், “சோசியல் மீடியா வேறு, உண்மையான உலகம் வேறு. இரண்டும் முற்றிலும் வித்தியாசமானவை. இப்போது நான் ஹைதராபாத்துக்கோ திருப்பதிக்கோ சென்றால் அங்கு மக்களை சந்திக்கிறேன். அது எனக்கு ரொம்ப முக்கியம். ஆனால் சோசியல் மீடியாவில் சில விஷயங்கள் இருக்கிறது. ஆட்டோமெட்டிக் புரோகிராம் செய்யப்பட்ட அக்கவுண்ட்டுகள். அதில் டி.பி. இருக்காது, எந்த பதிவுகளும் இருக்காது. நானும் ஒரு மனிதன் என்பதால் அந்த முகமற்ற அக்கவுண்ட்டுகளின் ட்ரோல்களால் பாதிக்கப்படுகிறேன். ஆனால் அது நிஜ உலகம் இல்லை என்பதை உணர வேண்டும். இது அவசியம்.
எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 30 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அவர்களை வைத்து 30 மில்லியன் டிக்கெட்டுகளை விற்றுவிடலாம் என்றால் அதற்கு உத்தரவாதம் கிடையாது. அதேபோல், நிறைய சூப்பர் ஸ்டார்கள் வெறும் 5 மில்லியன் ஃபாலோயர்ஸை வைத்திருக்கிறார்கள். அவர்களால் மிகப் பெரும் கூட்டத்தை தியேட்டருக்கு கொண்டு வர முடிகிறது. அதனால் நமது வேலையை சரியாக செய்வது ரொம்ப முக்கியம், அந்த வேலைக்காக மக்களிடம் நேரடியாக கருத்துகளை பெற வேண்டும்” என்றார்.
இதையடுத்து கூலி படத்தில் இவர் நடித்திருக்கும் நிலையில் அது ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருப்பதாகக் கூறப்படுகிறது. அது குறித்த கேள்விக்கு “கூலி படத்தில் ஒரு பாடலுக்குத் தான் நடனமாடியிருக்கிறேன். ரஜினி சாருடன் நடித்தது உண்மையிலே ஒரு ஸ்பெஷல் அனுபவம்” என்றார். பின்பு அவர் ஆடிய பாடல் தமன்னா ஆடிய காவாலா பாடல் போல் இருக்குமா என்ற கேள்விக்கு, “இல்லை. இது முற்றிலும் வேறு. இந்த பாடலின் இசை மற்றும் உணர்வு தனித்துவமானது. இதை ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்” என்றார்.