புஷ்பா பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக கடந்த 5ஆம், தேதி வெளியாகியிருக்கும் படம் புஷ்பா 2 - தி ரூல். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.922 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பட்னாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்தனர். இந்த கூட்டம் பலரது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பாக சித்தார்த், தனது மிஸ் யூ பட புரொமோஷனில் ஒரு யூட்யூப் பேட்டியில், “அது அனைத்தும் மார்க்கெட்டிங். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் கூட்டம் கூடுவது பெரிய விஷயமில்லை. உதாரணமாக நமது ஊரில் கட்டிட வேலைகளுக்காக நான்கு ஜேசிபியை நிறுத்தினால் அதை பார்க்க கூட்டம் கூடும். படக்குழு ஒரு மைதானத்தை புக் செய்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். அதை பார்க்க மக்கள் வந்திருக்கிறார்கள் அவ்வுளவுதான். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் சித்தார்த்தின் பேச்சுக்கு பாலிவுட் பாடகர் மிகா சிங் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “வணக்கம் சித்தார்த் பாய். உங்கள் கருத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இன்று முதல் மக்கள் உங்கள் பெயரைக் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கியுள்ளனர். சற்று யோசித்துப் பாருங்கள், இதுவரை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.