பாலிவுட்டில் நடிகராக வலம் வருபவர் நீல் நிதின் முகேஷ். தமிழில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக மாதவன் நடிப்பில் கடந்த மாதம் இந்தியில் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான ஹிஸாப் பராபர் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நியூயார்க் விமான நிலையத்தில் தான் கைது செய்யப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் படப்பிடிப்பிற்காக நியூயார்க் சென்ற போது விமான நிலையத்தில் என்னை கைது செய்தனர். நான் இந்தியர் என்றும் என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருப்பதையும் அவர்களால் நம்பமுடியவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். என்னை பதில் சொல்லவே அனுமதிக்கவில்லை.
கிட்டதட்ட நான்கு மணி நேரம் என்னை காவலில் வைத்தனர். பின்பு என்னை பற்றி சொல்ல அனுமதித்தனர். நான் கூகுளில் என்னை பற்றி தேடுங்கள் என்று சொன்னேன். அதன் பிறகுதான் என்னைப் பற்றி தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டு பின்பு என் தாத்தா, தந்தை, என்னுடைய வம்சாவளி குறித்து விசாரித்து விட்டனர்” என்றார். நீல் நிதின் முகேஷின் தாத்தா பிரபல பாடகர் முகேஷ் என்பதும் தந்தை பாடகர் நிதின் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.